ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தொலைத்தொடர்பு துறைக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து மத்திய சட்டம் மற்றும் தொலைத் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் ஆகி யோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொலைத் தொடர்புக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2251.25 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் 5ஜி சேவைகளை வழங்கும் 3,300 முதல் 3,600 மெகா ஹெட்ஸ் வரையிலான அலைக்கற்றைகள் ஏலம் விடப்படாது. மற்ற அலைகற்றைகள் ஏலம் விடப்படும். ஏலம் விடப்பட இருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் அடிப்படை விலை மதிப்பு ரூ. 3.92 லட்சம் கோடி. இதற்கான அலைக்கற்றை ஏலத்துக்கான விண்ணப்பம் இந்த மாதத்தில் வெளியிடப்படும்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விற்பனை செய்வதற்கான ஏலம் வருகிற மார்ச் மாதம் நடைபெறும். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் மூலம் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்துக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

x