விரைவில் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது கேலக்ஸி எப்62 என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பாலிகார்பனைட் பில்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை சாம்சங் கிளாஸ்டிக் என அழைக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனில் மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என்றும் டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் டூயல் சிம் கார்டு வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இத்துடன் எக்சைனோஸ் 9825 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் நொய்டாவில் உள்ள ஆலையில் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.