இசிஜி அம்சத்தில் குறைபாடு – ஸ்மார்ட்வாட்ச்களை மாற்றிக் கொடுக்கும் பிட்பிட்

பிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள் தங்களது வாட்ச் இசிஜி அம்சம் சீராக இயங்கவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக பிட்பிட் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு புதிய யூனிட்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

இசிஜி அம்ச குறைபாடு ஹார்டுவேர் சார்ந்த ஒன்று எனவும், இது சிறு எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டும் ஏற்படுவதாக பிட்பிட் தெரிவித்து இருக்கிறது. எனினும், எதனால் இந்த கோளாறு ஏற்படுகிறது என பிட்பிட் சரியாக தெரிவிக்கவில்லை.

பிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இசிஜி வசதியுடன் அறிமுகமான பிட்பிட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த பிரச்சினை 900 யூனிட்களில் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு பின் எதிர்காலத்தில் அறிமுகமாகும் பிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த பிரச்சினை ஏற்படாது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் வேறு எந்த பிட்பிட் சாதனத்திலும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாது என்றும் தெரிவித்து இருக்கிறது.