இணையத்தில் லீக் ஆன M1X சிப் கொண்ட மேக் மினி

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் சிலிகான் M1 பிராசஸரை அறிமுகம் செய்த போது, அதனை பயன்படுத்தும் முதல் மூன்று சாதனங்களில் ஒன்றாக மேக் மினி இருந்தது. தற்போது ஆப்பிள் மேம்பட்ட புது மேக் மினி மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய மேக் மினி M1X பிராசஸர், அதிக போர்ட்கள் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புது மேக் மினி ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரென்டர்களின் படி புது மேக் மினி அளவில் மெல்லியதாக காட்சியளிக்கிறது.
 மேக் மினி
பின்புறம் புதிய மேக் மினி மாடலில் 4 தண்டர்போல்ட் போர்ட்கள், 2 யுஎஸ்பி டைப் ஏ போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட் மற்றும் HDMI போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் காந்த சக்தி கொண்ட பவர் கனெக்டர் வழங்கப்படும் என தெரிகிறது. இதே போன்ற கனெக்டர் சமீபத்திய ஐமேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆப்பிள் மேக் மினி மாடல், மேம்பட்ட மேக்புக் ப்ரோ லேப்டாப்களுடன் ஜூன் 7 ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கும் WWDC 2021 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.