வேன் சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து 13 பேர் உடல் கருகி பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத் நகரில் இருந்து கராச்சி நகர் நோக்கி பயணிகள் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த வேனில் 20 பயணிகள் இருந்தனர்.

கராச்சிஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து வேனில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து வேன் தீப்பிடித்து எரிந்தது. வேனுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் மரண ஓலம் விட்டனர்.

சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் 13 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.