பெண் நீதிபதி ஆமி கோனி பாரெட்டை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகள் உண்டு. அவர்களில் ஒரு பெண் நீதிபதியாக இருந்து வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் கடந்த வாரம் புற்றுநோயால் காலமானார்.

இதனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியானது. வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யப்பட்ட பின்னரே காலியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியை நிரப்ப வேண்டும் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூறுகிறார்.

ஆனால் ஜனாதிபதி டிரம்போ, தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதால் அதனை கவனிக்க சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகளும் பதவியில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

அதன்படி காலியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு பெண் நீதிபதி ஆமி கோனி பாரெட்டை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இந்த நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான வாக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

ஆனால் டிரம்பின் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்கக்கூடாது என ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.