இரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்… டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையை தூண்டியதாக அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் பாராளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.‌ இதற்காக டொனால்டு டிரம்பை பதவி நீக்க வகைசெய்யும் தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டனர்.

அதன்படி பிரதிநிதிகள் சபையில் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்தனர். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 222 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், 10 குடியரசு கட்சி உறுப்பினர்களும் என மொத்தம் 232 உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 197 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.

அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை தகுதிநீக்க குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

தற்போது தகுதிநீக்க தீர்மானம் நிறைவேறியதையடுத்து டிரம்ப் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் பேசிய டிரம்ப், கடந்த வாரம் நடந்த பாராளுமன்ற கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், தனக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

தகுதி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளதால், இனி செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். செனட் சபையில் தீர்மானம் மற்றும் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடைபெறும். டிரம்ப் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும். குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இது நடந்தால், டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால் வரும் செவ்வாய்க்கிழமை வரை, அதாவது பைடன் பதவியேற்புக்கு முந்தைய நாளான 19ம் தேதி வரை செனட் சபையில் தீர்மானம் மீது விவாதம் நடைபெறாது என செனட் சபை பெரும்பான்மை தலைவரும் குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினருமான மிட்ச் மெக்கன்னல் தெரிவித்தார். இப்போதைக்கு அந்த விவாதம் எவ்வாறு தொடரும் என்பதும், செனட் சபையில் உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் டிரம்பை குற்றவாளியாக்க வாக்களிப்பார்களா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

டிரம்ப் பதவியில் இருந்து விலகும் வரை விசாரணை நடக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் அது விளைவை ஏற்படுத்தக்கூடும்.

x