அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவ்வப்போது பேசிவரும் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வருகிறார். டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்படும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்த நிலையில் திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க போலீசார் முயற்சித்தபோதும் அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

பாராளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றும் நடைமுறைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x