பாராளுமன்ற கட்டிடம் முற்றுகை – துப்பாக்கிச்சூட்டில் படுகாயடைந்த பெண் உயிரிழப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தார்.

அப்போது, பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்த போது திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினரை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய ஆயிரக்கணக்கானோர் முயற்சித்தனர். இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒரு படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. பாராளுமன்றத்தை முற்றுகையிட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்ற கட்டிட முற்றுகை போராட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

x