அமெரிக்க பாராளுமன்றம் முற்றுகை – தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்த நிலையில் திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்களை தடுக்க பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் அதிக அளவில் இருந்ததால் நிலைமையை கட்டுப்படுத்தமுடியவில்லை. கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. ஆனாலும், டிரம்ப் ஆதரவாளர்கள் பலரும் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவர தேசிய பாதுகாப்பு படையினர் (நேஷனல் கார்ட்ஸ்) களமிறக்கப்படுவதாக வெள்ளைமாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ, போலீஸ் பிரிவினரும் களமிறக்கப்பட்டனர்.

உடனடியாக செயல்பாட்டிற்கு வந்த தேசிய பாதுகாப்பு படையினர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பலரையும் கைது செய்தனர்.

மேலும், கட்டிடத்தை சுற்றிநின்ற டிரம்ப் ஆதவராளர்களையும் அப்புறப்படுத்தினர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் – பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x