திபெத்தின் தலாய்லாமா தேர்வில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டம்

சீனா கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் திபெத்தை ஆண்டு வந்த தலாய்லாமா அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலமாகினார்.13-ம் நூற்றாண்டிலிருந்து திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் சீனா கூறி வருகிறது. ஆனால் திபெத்தை சீனா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. மேலும் திபெத்தின் மத மற்றும் கலாசார விவகாரங்களில் சீனா தலையிடுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. எனவே திபெத்தின் சுதந்திரத்துக்காக அமெரிக்கா வலுவான ஆதரவு குரலை எழுப்பி வருகிறது. மேலும் திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதே சமயம் திபெத் பிரச்சினையில் தலையிடுவது மூலம் அமெரிக்கா சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020’ என்கிற சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் டிரம்ப் நேற்று அந்த மசோதாவில் கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் திபெத்தின் அடுத்த தலாய்லாமாவை சீனாவின் குறுக்கீடு இல்லாமல் புத்த சமூகத்தினர் மட்டுமே தேர்வு செய்வதை உறுதிப்படுத்துவதாகும்.

இதற்காக ஒரு சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்ப இந்த சட்டம் வலியுறுத்துகிறது. இந்த சட்டம் திபெத் தொடர்பான பல்வேறு திட்டங்கள் மட்டும் விதிகளை மாற்றி அமைத்து மறு அங்கீகாரம் வழங்குகிறது.

மேலும் இந்த புதிய சட்டம் திபெத்தின் லாசா நகரில் அமெரிக்க தூதரகத்தை நிறுவுவதற்கு வழிவகுக்கிறது. அதன்படி திபெத்தில் ஒரு அமெரிக்க தூதரகத்தை திறக்க சீனா அனுமதிக்காவிட்டால் அமெரிக்காவில் ஒரு புதிய சீன தூதரகத்தை திறக்க முடியாது என அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திபெத் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்பு ஒருங்கிணைப்பாளரின் அலுவலகத்துக்கு இந்த சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது.

அதேபோல் திபெத்தின் தலாய்லாமாவை தேர்வு செய்வதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடும் சீன அரசாங்கத்தின் அல்லது சீன கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க அரசுக்கு இந்த சட்டம் அனுமதி வழங்குகிறது.

x