தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில், நர்ஸ்களிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் தலைமை நர்ஸ் டிஃபானி பாண்டிஸ் டோவர் (30 வயது)
இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், ‘கொரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்பதை விளக்கும் விதமாகத் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். 
அப்போது சிலநிமிடங்களில், மயங்கிச் சரிந்துவிட்டார். இந்த நேரலை உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டது.
உடனே, அமெரிக்கத் ‘தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்’  கூக்குரல் எழுப்பிவிட்டனர். கொரோனா தடுப்பூசிக்கு மக்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்க வேண்டாம் என எதிர்ப்பை தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்பதற்கு இந்தச் சான்றே போதும்; உடனடியாக அதைத் தடை செய்யுங்கள் என்று போர்க்கொடி உயர்த்தி விட்டனர்.
நர்ஸ் டிஃபானிக்கு, எப்போது ஊசி போட்டாலும் அந்த வலியைத் தாங்க முடியாது என்றும் உடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் தானாகவே சரியாகிவிடும் என்று தொலைக்காட்சி பேட்டியின் போதும் இதுதான் நடந்தது என்று அவர்  பிறகு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மயக்கம் அடைந்தால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பதட்டத்துடன் அவரைப் பார்க்க, அவர் சிரித்த முகத்துடன் தனக்கு ‘வலி உணர்வைத் தாங்க முடியாதபோது மயக்கம் வருவது உண்டு என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.