மீன்பிடிக்க செல்லும்போது வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சி கேட்டதால் கப்பல் கேப்டன் பொதுஇடத்தில் சுட்டுக்கொலை

உலகின் மிகவும் சர்வாதிகார நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடு வடகொரியா. அணு ஆயுத வல்லமை கொண்டுள்ள இந்நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவை தனது பரம எதிரியாக நினைத்துள்ளது. வடகொரியாவின் அதிபரான கிம் ஜங் உன் பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையில், பொதுமக்களுக்கு கருத்துரிமை, பேச்சுரிமை உள்பட எந்தவித அடிப்படை உரிமையும் வழங்கப்படாமல் அங்கு சர்வாதிகார மற்றும் ராணுவ ஆட்சியே நடைபெற்று வருகிறது.
ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவரையும் அந்நாட்டு அதிபர் கிம் தூக்குதண்டனை நிறைவேற்றி வருகிறார். மேலும், கலாச்சார ரீதியில் அண்டைநாடான தென்கொரியா முன்னேற்றம் அடைந்துள்ள போதும் அந்த கலாச்சாரத்தை முழுவதும் வடகொரியா தடை செய்துள்ளது. 
பொதுமக்கள் யாரேனும் அரசுக்கு தெரியாமல் வெளி உலக தொடர்பை வைத்திருந்தால் அவர்கள் ஈவு இரக்கமின்றி பொதுவெளியில் தூக்குதண்டை அல்லது சுட்டுக்கொல்லப்படும் கொடூரமும் வடகொரியாவில் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது, வெளி உலக கலாச்சாரத்தை பின்பன்றுவது வடகொரியாவில் மரண தண்டனைக்குரிய குற்றமாகவே கருத்தப்படுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவபர்களுக்கு பொதுவெளியில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்நிலையில், கடலில் மீன்பிடிக்க செல்லும்போது வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சி கேட்ட கப்பல் கேப்டன் பொது இடத்தில் வைத்து பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
வடகொரியாவின் தெற்கு ஹம்ங்யாங் மாகாணத்தை சேர்ந்தவர் சோய் (40). இவர் வடகொரிய ராணுவத்தில் ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றியுள்ளார். அதன்பின் ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற சோய் சொந்தமாக மீன்பிடி கப்பலை வாங்கி அதன் கேப்டனாக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் ராணுவத்தில் பணியாற்றியபோதே வெளிநாட்டு ரேடியோ அலைவரிசைகளை ட்யூன் செய்து வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை ரகசியமாக கேட்டுள்ளார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று மீன்பிடி கப்பல் கேப்டனாக மாறிய பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது தனது கப்பலில் வைத்து வெளிநாட்டு ரேடியோ அலைவரிசைகளை ட்யூன் செய்து அந்நிகழ்ச்சிகளை கேட்டுள்ளார்.
குறிப்பாக தென்கொரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ரேடியோ ப்ரி ஆசியா என்ற ரேடியோ அலைவரிசையை அவர் தொடர்ந்து கேட்டுவந்துள்ளார். நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது் வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்பது வடகொரிய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்துவந்துள்ளது.
ஆனால், அவர் வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்பது அவரது மீன்பிடி கப்பலில் வேலை செய்துவந்த அனைவருமே தெரிந்துள்ளது. ஆனால், அவர்கள் இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் கப்பல் கேப்டன் சோய்க்கும் அவரது கப்பலில் வேலை செய்துவந்த ஒரு ஊழியருக்கும் இடையே சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பிரச்சனை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் கேப்டன் சோய் மீன்பிடி பயணத்தின்போது வெளிநாட்டு ரேடியோ நிகழ்சிகளை கேட்கும் தகவலை வடகொரிய பாதுகாப்பு படையினரிடம் ரகசியமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலில் மீன்பிடி பயணத்தை முடித்துவிட்டு அந்நாட்டின் சோங்ஜிங் துறைமுகத்திற்கு வந்தடைந்த சோய்யை வடகொரிய பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்த பின்னர் துறைமுகப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் முன்னிலையில் சோய்யிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை
மேற்கொண்டனர்.
விசாரணையில் மீன்பிடிக்க செல்லும்போது கப்பலில் வைத்து வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்பதை கேப்டன் சோய் ஒப்புக்கொண்டார். வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்பது குற்றம் என்பதால் குற்றத்தை ஒப்புக்கொண்ட கேப்டன் சோய்க்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
உடனடியாக துறைமுகத்தில் அனைத்து ஊழியர்களின் முன்னிலையில் பொதுவெளியில் வைத்து கேப்டன் சோயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வடகொரிய பாதுகாப்பு படையினர் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சி கேட்ட குற்றத்திற்காக வடகொரியாவில் மீன்பிடி கப்பல் கேப்டன் பாதுகாப்பு படையினரால் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.