நேபாளத்தில் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு பிரதமர் சர்மா ஒலி பரிந்துரை

நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. நேபாள பிரதமர் சர்மா ஒலி, இந்தியாவின் மீதும் மறைமுகமாகக் குற்றம்சாட்டியது இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அவரது பேச்சை முன்னாள் பிரதமர் பிரசண்டா உள்ளிட்ட பலர் கண்டித்தனர்.
அதன் பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. எதிர்ப்பாளர்கள் தனி கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினர். கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்துகொண்டே வந்தது. பாராளுமன்றத்திலும் மெஜாரிட்டியை இழந்தார்.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் சர்மா ஒலி மந்திரிசபை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இக்கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்வதற்கு பதிலாக, பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 
இந்த பரிந்துரை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அடுத்த பொதுத்தேர்தல் 2022ல் நடத்தப்பட வேண்டும். அமைச்சரவை முடிவை ஜனாதிபதி ஏற்றால் புதிதாக தேர்தல் நடத்தப்படுமா? என்பது தெரியவில்லை.
‘இன்று நடந்த மந்திரிசபைக் கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ளாததால், பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது மற்றும் தேசத்தை பின்னோக்கி அழைத்துச் செல்லும். இதை செயல்படுத்த முடியாது’ என கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
எனினும் இந்த விஷயத்தில் ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கிறாரோ, அதன்படி அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.