கொரோனா இயற்கையானதா? ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா?

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தற்போது 218 நாடுகள்\யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 7 கோடியே 43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், தொடக்கத்தில் வௌவ்வாலில் இருந்து கொரோனா பரவியதாக கருத்துக்கள் நிலவின. வொவ்வாலை உண்ணும் ஒருவகை பாம்பை சீன மக்கள் உணவாக உட்கொண்டு வந்தனர்.

இதனால், கொரோனா வைரஸ் வௌவ்வாலில் இருந்து பாம்பிற்கு பரவி பின்னர் பாம்பில் இருந்து மக்களுக்கு பரவியதாக கருத்துக்கள் நிலவி வருகிறது.

அதேவேளை கொரோனா வைரஸ் வுகான் நகரில் உள்ள ஆய்வகக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும், இந்த வைரசை சீனா வேண்டுமென்றே உருவாக்கி இருக்கலாம் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சுமத்தி வந்தன.

இதனால், வைரஸ் எப்படி உருவானது, இயற்கையாக உருவானதா? அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? அது மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்தது.

இது குறித்து உலக நாடுகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால், விவகாரம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது.

இதற்காக சீனாவின் வுகான் நகருக்கு செல்ல உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தனர். ஆனால், உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவினர் வுகான் நகருக்கு சென்று கொரோனாவின் உருவாக்கம் குறித்த ஆராய்சியை மேற்கொள்ள சீனா அனுமதி கொடுக்க மறுத்து வந்தது.

இதையடுத்து, தங்கள் விஞ்ஞானிகளை வுகான் நகரில் கொரோனா ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதிக்கம்படி சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

பலகட்ட பேச்சுவார்த்தைக்கும் பின்னர் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு வுகான் நகருக்கு பயணம் மேற்கொண்டு சீனா அனுமதியளித்தது.

சீனாவின் அனுமதியையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவினர் வுகான் நகருக்கு செல்ல உள்ளனர்.

இந்த பயணத்தின்போது வுகான் நகரில் கொரோனா எப்படி
உருவானது? வைரஸ் இயற்கையாக உருவானதா? அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவியது? வைரஸ் எப்போது உருவானது? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வுகான் நகருக்கு சென்று நடத்த உள்ள ஆய்வு கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு உண்மைகளை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் என கருத்துக்கள் பரவி வருகிறது.