ஆப்கானிஸ்தான் வான் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பது பன்மடங்கு உயர்வு

ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த வான்தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களே பெருமளவு கொல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வான் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிர் இழப்பது 330 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 700-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆப்கானிஸ்தான் ராணுவம் மட்டும் நடத்திய வான் தாக்குதல்களில் 86 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.