இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்ப முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் இன்று (டிசம்பர் 8) பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போட்டப்படுகிறது என்ற கேள்வியும், ஆர்வமும் உலகம் முழுவதும் எழுந்தது. அந்த கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
பரிசோதனைகள் தவிர்த்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதல்நபராக 90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கெனென் என்பவருக்கு போடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகாரப்பூர்வாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை மார்க்ரெட் கெனென் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நேரப்படி சரியாக காலை 6.31 மணிக்கு மார்க்ரெட்டுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது.