சோமாலியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற டிரம்ப் உத்தரவு

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டின் உள்நாட்டுப் படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி அளித்து வருகின்றன. அல்-கைதா உடன் தொடர்பில் உள்ள அல்-ஷபாப் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டில் உள்ள அமெரிக்கப்படைகள் திரும்பப் பெறப்படுவதாக அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனினும் இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதத் தேவையில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.