இங்கிலாந்தை தொடர்ந்து பைசர் நிறுவன தடுப்பூசிக்கு பக்ரைன் நாடு அனுமதி

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றம் மருந்து நிறுவனத்திடமும் ஐரோப்பிய சுகாதாரத்துறையிடனும் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதற்கிடையே பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு பக்ரைன் நாடு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்த தடுப்பூசிக்கு இங்கிலாந்தை தொடர்ந்து 2-வது நாடாக பக்ரைன் அனுமதி கொடுத்து இருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டு தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரியம் அல்- ஜலாகஷ்மா கூறும்போது, பைசர் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் மேலும் முக்கியமான பலத்தை சேர்க்கும் என்றார்.

கடந்த மாதம் பக்ரைனில் முன்கள சுகாதார பணியாளர்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்ரைனில் இதுவரை கொரோனாவுக்கு 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 341 பேர் பலியாகி இருக்கிறார்கள்.