கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 பேரில் ஒருவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் குறைந்தது 14 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டி இருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் அவசர மருத்துவம் தொடர்பான பத்திரிகை நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் 10 நோயாளிகளில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளதாக தெரியவந்துள்ளது.

காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வருவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை 1,400 நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஆஸ்டின் கிலாரு இதுபற்றி கூறுகையில் “இந்த ஆய்வு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுடன் அதிக தகவல்களை பரிமாற அவசரகால மருத்துவர்களுக்கு உதவுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.