ஆஸ்திரியா 6 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 பேர் பலி

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இன்று ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கிற்கு முன்னதாக நேற்று இரவு நகரின் பல்வேறு இடங்களில் உள்ள உணவகங்கள், கேலிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் அலைபோதியது.

அப்போது, நகரின் முக்கிய பகுதியில் கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான்.

அதேபோல், வியன்னாவில் தேவாலயம் அமைந்திருந்த பகுதி, யூதர்கள் வழிபாட்டு தளம் அமைந்திருந்த பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் அரங்கேறியுள்ளது. மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகவலறிந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஒரு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். எஞ்சிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்னர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஆனாலும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என ஆஸ்திரிய உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற எஞ்சிய ஐஎஸ் பயங்கரவாத ஆதரவாளர்களை பாதுகாப்பு படையினர் தேடிவருகின்றனர்.

ஆனாலும், இந்த தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். இதனால், ஆஸ்திரிய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 5 (1 பயங்கரவாதி உள்பட) ஆக உள்ளது.

ஆஸ்திரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

x