துருக்கி நிலநடுக்கம் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் கடந்த 31-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான இஸ்மிர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.

கடல்நீரும் சுனாமி அலைகளாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்தன. இந்த நிலநடுக்கத்தால் 300-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், மீட்பு நடவடிக்கையில் போது பலரும் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 91 மணிநேரம் கழித்து (சுமார் 4 நாட்கள்) 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அய்டா ஹிஸ்ஜின் என்ற பெயருடைய அந்த சிறுமி இடிபாடுகளுக்குள் சிக்கி 4 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

x