அது நடந்தால் அமெரிக்காவுக்கே அவமானம்: கடும் விமர்சனத்தை முன்வைத்த டிரம்ப்

அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானமாக கருதப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 3ம் திகதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் ஜனாதிபதி வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக குடியரசுக் கட்சி சார்பாக டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வடக்கு கரோலினா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவின் முதல் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானமாக கருதப்படும்.

அமெரிக்க மக்கள் அவரை விரும்பவில்லை. அவர் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சுவாரசியமாக உள்ளது.

மேலும் பேசிய ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவரும் பேசி வருவது அவர்களுக்கு எதிராகவே போய் முடியும்.

கமலா ஹாரிஸ் ஒருக்காலும் ஜனாதிபதியாக முடியாது என கரோலினா மாகாணத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.