வட கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய இராணுவத்திற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருக்கிறார்.

கடந்த 12 ஆம் திகதி நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.

அங்கு நேற்று முன்தினம் வரை 27 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. நேற்று மேலும் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2 இலட்சத்து 96 ஆயிரத்து 180 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடக நிறுவனம் கே.சி.என்.ஏ. அறிவித்துள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்துள்ளதாம்.

2 கோடியே 60 இலட்சம் பேர் வாழ்கிற அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பெரிதாக இல்லை. யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதெல்லாம் உலக அரங்கை கவலைக்குள்ளாக்கி இருக்கின்றன.

வட கொரியாவில் குறைந்தளவிலான பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சில தொற்றாளர்கள் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளனர்.

தடுப்பூசிகள் இல்லாததாலும், மோசமான சுகாதாரப் பாதுகாப்பு முறையாலும் வட கொரியர் மக்கள் குறிப்பாக வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதுதாக தெரிவிக்கப்படுகிறது.