மலேசியாவில் கொட்டும் பேய் மழை: வெள்ள பாதிப்பு மோசமாகிறது..!!

பருவநிலை மாற்றம் உலகளவில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை.

பருவநிலை மாற்றம் காரணமாக பல நாடுகளில் மழைப்பொழிவு காலம்தவறி வழக்கத்தை விட அதிக அளவில் மழை கொட்டுகிறது. இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அந்தவகையில் தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் வரலாறு காணாத அளவில் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று தான்.

இருப்பினும், அங்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் அளவுக்கு அதிகமாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டும் பேய் மழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் கோலாலம்பூர் அமைந்துள்ள மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள சிலாங்கூர் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

அங்கு காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் மார்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. 8 மாகாணங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சுமார் 70 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் வடியாத நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலாங்கூர் மாகாணத்தில் மட்டும் 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு மழை, வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் குவிந்துள்ளதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.