இந்து மத கடவுள் சிலை உடைப்பு – பாகிஸ்தானில் தொடரும் தாக்குதல்

இஸ்லாமிய மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட பாகிஸ்தானில் பிற மதத்தினரை பின்பற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பிற மதத்தினரின் கோவில்கள், அவர்கள் வணங்கும் கடவுள் சிலைகள் மீது தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சி நகரம் நாராயன்புரா என்ற கிராமத்தில் இந்து மத கடவுளான நாராயணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த இந்து மத மக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

நாராயணர் கோவிலுக்குள் நேற்று நுழைந்த நபர் கோவில் இருந்த காளி அம்மன், விநாயகர் உள்ளிட்ட இந்து மத கடவுள்களின் சிலைகளை சுத்தியலை கொண்டு தாக்கி சேதப்படுத்தினார். நபர் ஒருவர் கடவுள் சிலைகளை சேதப்படுத்துவதை பார்த்த கோவிலில் இருந்தவர்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்து மத கடவுள் சிலைகளை சுத்தியல் கொண்டு உடைத்த அந்த நபர் முகமது வாலிட் ஷபீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முகமதுவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாராயன்புரா பகுதியில் வசித்து வரும் இந்து மத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தினர்.