தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் ஒமைக்ரான் குழந்தைகள் அதிகம் பாதிப்பு!

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் பெருகி வரும் ஒமைக்ரான் தொற்றினிடையே, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இல்லாத நிலைமை கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்தபடியாக 5 வயதுக்கும் கீழ் இருக்கும் குழந்தைகள் தான் ஒமைக்ரான் தொற்றினால் அதிகம் பாதிப்படையும் பிரிவில் இருப்பதாக அந்நாட்டு மருத்துவத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் வைரசால் அங்கு கொரோனா பாதிப்பின் நான்காம் அலை வேகமெடுத்து வருகின்றது. இம்முறை குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் மருத்துவர் மிச்செல் குரூம் கூறுகையில், “தற்போது, நான்காம் அலையின் தொடக்கத்தில் தான் இருக்கிறோம். இந்த அலை இன்னும் தீவிரமடையும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான படுக்கைகள் அதிக அளவில் தேவைப்படும். மேலும், மருத்துவப் பணியாளர்களை அதிகப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.”

தென் ஆப்பிரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 16,055 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.