சவுதி அரேபியாவில் ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு

உருமாறிய புதிய கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் திகதி கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. இதற்கு காரணம், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுவதுதான்.

ஒமிக்ரான் என்று இந்த வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு பெயரிட்டு, அதன் நிபுணர் குழு இந்த வைரசை இரவு பகலாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஒரு வார காலத்திற்குள் ஒமிக்ரான் வைரஸ் 14-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் தடம் பதித்து, உலகை அச்சுறுத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிய ஒமிக்ரான் கொரோனா மத்திய கிழக்கு நாட்டிலும் கால் பதித்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து, அவரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வாரம் 7ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்து இருந்தது.