பாகிஸ்தான் மிருகக்காட்சி சாலையில் பட்டினியால் எலும்பும் தோலுமான சிங்கம்

பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சி சாலையில் எலும்பும் தோலுமான ஒரு சிங்கத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலையானது கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்குவதில்லை அதில் கூறப்பட்டு உள்ளது.

மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் அம்ஜத் மெஹ்பூப் என்பவருக்கு பிப்ரவரி 2021 முதல் நிர்வாகம் பல மாதங்களாக பணம் கொடுக்கவில்லை. இதனால் அவர் விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்வதை நிறுத்தி விட்டார். இதனால் விலங்குகளுக்கு அங்கு உணவு வழங்கப்படுவது இல்லை என தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும், மிருகக்காட்சிசாலைக்கு உணவு விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் மெஹ்பூப் கூறி உள்ளார். மேலும் நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷன் செய்தித் தொடர்பாளர் அலி ஹசன் சாஜித், உள்ளூர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் மிகவும் பழைய படங்கள். மிருகக்காட்சிசாலைக்கு எதிரான பிரசாரத்தைப் பரப்ப இது பயன்படுத்தப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.