குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ‘குட்டி ரோபோக்கள்’

உலகில் உள்ள நவீன தொழில்நுட்பங்களில் அதிகம் முன்னேறிய நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. இங்கு வித்தியாசமான முயற்சியாக மழலையர் பள்ளிகளில் ரோபோக்களை கற்றல் இயந்திரமாக அறிமுகப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு உயர்ந்த நவீனமயமான தொழில்நுட்ப எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக சியோல் முழுவதும் 300 நர்சரிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

25 சென்டிமீட்டர் உயரமுள்ள இந்த ரோபோ ஆடல், பாடல் மற்றும் குங்பூ போன்ற செயல்களை செய்கிறது.ஆல்பா மினி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கதை சொல்லிக்கொடுக்கும், குங்பூ கற்றுக்கொடுக்கும், அதை பார்த்து குழந்தைச் செல்வங்களும் அப்படியே செய்கின்றன.

ரோபோவின் தலையில் கேமராவும் உள்ளது. அந்த கேமரா குழந்தைகளின் நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து பிறருக்கு அனுப்புகின்றது.

குழந்தைகளின் படைப்பாற்றலுக்கு இந்த ரோபோக்கள் உதவுகின்றன என்று ஒரு நர்சரி பள்ளியின் ஆசிரியர் பியூன் சியோ-இயோன் கூறியுள்ளார்.

“நான் பாடச் சொன்னால் நன்றாகப் பாடும். நான் அதை நடனமாடச் சொல்கிறேன், நாங்கள் ஒன்றாக நடனமாடுகிறோம்” என்று ஐந்து வயது குழந்தையான லீ கா-யூன் கூறினார்.

4-5வயது குழந்தைகளின் தினசரி வகுப்பில் இந்த ரோபோ சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.