மாயமானதாக கருதப்பட்ட சீனா டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக உள்ளதாக தகவல்

சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் (வயது 35). அந்த நாட்டின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

பெங் சூவாய் சமூக வலைத்தளத்தில் இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் அவர் திடீரென மாயமானார். அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என எந்த தகவலும் வெளியாகவில்லை.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாங் கோலி, அதிபர் ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிகிறது. இதனால் பெங் சூவாய் மாயமானதன் பின்னணியில் சீன அரசு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் மயமான டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் நலமுடன் இருப்பதை உறுதி செய்யும் ஆதராத்தை சீனா வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியது.

உலகளாவிய கவலை அலைகளுக்கு மத்தியில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், சீன டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாயுடன் வீடியோ போன் மூலம் உரையாடினார், மேலும் அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக கூறினார்.

சீன விளையாட்டு அதிகாரி லி லிங்வே மற்றும் தடகள ஆணையத்தின் தலைவரான எம்மா டெர்ஹோ ஆகியோர் இந்த இதில் கலந்துரையாடினர்.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 30 நிமிட உரையாடலில் பெங் தனது நலம் குறித்த அக்கறைக்கு கமிட்டிக்கு நன்றி தெரிவித்தார், மேலும் அவர் “பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார், பீஜிங்கில் உள்ள தனது வீட்டில் வசிக்கிறார், ஆனால் அவரது தனி உரிமைக்கு மதிப்பளிக்க விரும்புகிறேன் என கூறி உள்ளார்.

தடகள ஆணையத்தின் தலைவரான எம்மா டெர்ஹோ கூறும் போது,

பெங் சூவாய் நன்றாக இருப்பதைக் கண்டு நான் நிம்மதியடைந்தேன், இது எங்கள் முக்கிய கவலையாக இருந்தது. அவர் நிம்மதியாகத் இருக்கிறார். நான் அவருக்கு எங்கள் ஆதரவை தெரிவித்தேன். அவருடைய வசதிக்காக எந்த நேரத்திலும் தொடர்பில் இருக்க வேண்டும் என கூறினேன். அவர் வெளிப்படையாக எங்களை பாராட்டினார் என்று கூறினார்.