உகாண்டா 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 16-ம் திகதி பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் மற்றும் நாட்டின் தலைமை காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 தற்கொலைப்படை தாக்குதலில் மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் இறங்கியுள்ளனர்.

அதன்படி, அந்நாட்டின் லுவிரோ, லிவிசா, டுரோகோ, பிரிர்வி, பண்டிபுகு ஆகிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.