இன்று சர்வதேச குழந்தைகள் தினம்

உலக நாடுகளில் குழந்தைகள் தினமானது வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1954-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் திகதி, ஐக்கிய நாடுகள் சபை, குழந்தைகளுக்கிடையேயான சகோதரத்துவம் மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் நலனுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒன்றை கடைபிடிக்குமாறு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது.

1959-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரகடனம் செய்த நாள் மற்றும் 1989-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான மாநாடு நடத்தப்பட்ட நாளான நவம்பர் 20-ம் திகதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.

குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், துஷ்பிரயோகம், சுரண்டல், பாகுபாடு போன்ற வடிவங்களில் வன்முறையை அனுபவிக்கும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.