நகைச்சுவை வனவிலங்கு காமெடி குரங்கு புகைப்படத்திற்கு விருது..!

இந்த ஆண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுக்கான போட்டியானது தொழில்முறை புகைப்படக் கலைஞர்களான பால் ஜாய்சன், ஹிக்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகியோரால் வனவிலங்கு புகைப்படம் மீது கவனம் செலுத்துவதற்கும் நகைச்சுவை மூலம் வனவிலங்கு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் 2015-ல் இணைந்து உருவாக்கப்பட்டது.

இந்த போட்டிக்கு உலகெங்கிலும் இருந்து ஏறக்குறைய 7,000 நகைச்சுவையான வனவிலங்குகள் புகைப்படங்கள் போட்டியாளர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிளாக்பர்னைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான கென் ஜென்சன், ‘அச்சோ!’ என்ற தலைப்பில் பதிவேற்றிய குரங்கின் புகைப்படத்திற்காக ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதைப் பெற்றார்.

இந்த புகைப்படம் சீனாவின் யுனான் மாகாணத்தில் எடுக்கப்பட்ட கோல்டன் சில்க் இன குரங்கின் புகைப்படமாகும்.

இந்த ஆண்டு போட்டியின் மூலம் கிடைக்கும் மொத்த நிகர வருவாயில் 10 சதவீதம் போர்னியோவில் உள்ள குனுங் பலுங் தேசியப் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்டு ஒராங்குட்டான்களைப் பாதுகாக்க நன்கொடையாக வழங்கப்பட இருக்கிறது.