சூடானில் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த மாதம் 25-ம் திகதி ராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக அந்த நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் பாதுகாப்பு படைகளைக் கொண்டும், போலீசைக் கொண்டும் ஒடுக்கப்படுகின்றன.

இதற்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமையன்று ஆட்சி கவுன்சில் தலைவராக ராணுவ தளபதி அப்தெல் பட்டா அல் புர்ஹான் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு நடந்த போராட்டங்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதை சூடான் டாக்டர்கள் சங்கத்தின் மத்திய கமிட்டி உறுதி செய்தது.

4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானதாகவும், ஒருவர் கண்ணீர்ப்புகைக்குண்டுவீச்சில் மூச்சு திணறி இறந்ததாகவும் அந்தக் கமிட்டி கூறியது. அதே நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை மறுத்துள்ள போலீசார் குறைவான சக்தியையே பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

இந்த போராட்டங்களில் 39 போலீசார் படுகாயம் அடைந்ததாக அரசு தொலைக்காட்சி கூறியது. ஆனால் ஆம்டர்மன் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு படையினர் நுழைந்து, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்ற பலரை பிடித்து சென்றதாக டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவங்களுக்கு கார்ட்டூம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து சூடானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.