சீனா அனுப்பிய செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

விண்வெளி ஆய்வில் சீனா சமீப காலமாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ‘லாங் மார்ச்-6 ராக்கெட்’ என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் இந்திய நேரப்படி காலை 10.19 மணிக்கு வடக்கு சீனாவில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து SDGSAT-1என்ற செயற்கைக்கோள் ‘லாங் மார்ச்-6 ‘ராக்கெட்’ மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை ‘குவாங்மு’ செயற்கைக்கோள் என அந்நாட்டு பத்திரிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள் 515 கி.மீ. உயர சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் வெப்ப அகச்சிவப்பு கேமரா, குறைந்த ஒளி நிலை கேமரா உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் கிடைக்கும் தரவுகள் மூலம் மனித நகர்ப்புற, குடியிருப்பு மற்றும் கடலோர நடவடிக்கைகள் மற்றும் இயற்கைக்கு இடையேயான தொடர்பின் தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை மதிப்பிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.