“பூஸ்டர் டோஸ்” தடுப்பூசி செலுத்திக்கொண்ட கமலா ஹாரிஸ்..!

அமெரிக்க துணை ஜனாதிபதியான 57 வயதான கமலா ஹாரிஸ் ஏற்கெனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார். இந்த நிலையில் நேற்று அவர் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கமலா ஹாரிஸ் கூறுகையில், “நான் தற்போது மாடர்னாவின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டேன், நீங்கள் தகுதியுடையவராக இருக்கும்போது பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கிறேன். இது முற்றிலும் பாதுகாப்பனது மற்றும் இலவசமானது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இறந்தவர்கள். எனவே தடுப்பூசி போடுவோம், தொற்றுநோயைக் கடந்து செல்வோம்” என்று அவர் கூறினார்.

இதனிடையே அங்கு பல அமெரிக்கர்கள் இன்னும் தடுப்பூசிகளை எதிர்க்கிறார்கள், அங்குள்ள மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மாடர்னா, ஃபைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர்.

65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களும், கடுமையான கொரோனா தொற்றால் பாதிப்பில் இருக்கும் 18-64 வயதுடையவர்களும் இரண்டாவது டோசுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.