போப் ஆண்டவருடனான சந்திப்பு: பா.ஜ.க கிறிஸ்தவர்கள் ஆதரவுத் தளத்தை உருவாக்குகிறதா…?

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்து பேசினார். பெருந்தொற்று பாதிப்பின்போது பிற நாடுகளுக்கு இந்தியா உதவியதற்கு போப் ஆண்டவர் பாராட்டு தெரிவித்தார்.

போப் ஆண்டவரை விரைவில் இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

தேர்தல் நடைபெறும் கோவா மற்றும் மணிப்பூரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும், கேரளாவில் வலிமைமிக்க சக்தியாக உருவெடுக்கவும் பா.ஜ.க தனது கிறிஸ்தவர்கள் ஆதரவுத் தளத்தை உருவாக்க விரும்புகிறது,

போப் பிரான்சிஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு மற்றும் போப் ஆண்டவரை இந்தியா வர அழைப்பு ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கிறிஸ்தவ சமூகத்திற்குள் சில கவலைக் குரல்கள் எழுந்துள்ள நிலையில்,பா.ஜ.கவுடன் நெருங்கி பழகுவதற்கு செல்வாக்கு மிக்க ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த சிலர் உள்பட கிறிஸ்தவ தலைமைகள் பா.ஜ.க .தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்வமாக உள்ளன.

கடந்த சில மாதங்களாக கேரளாவில் இரு தரப்புக்கும் இடையே தொடர் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளாவில் கிறிஸ்தவ சமூகத்தை ஈர்ப்பதற்கான பாஜகவின் முந்தைய முயற்சிகள் அதிக பலனைத் தரவில்லை என்றாலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் கேரளாவில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க இப்போது முயற்சிக்கிறது.

சனிக்கிழமையன்று போப் ஆண்டவர் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு திருச்சபையால் வரவேற்கப்பட்டது.

இந்தியாவின் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டிற்கு (சிபிசிஐ) தலைமை தாங்கிய மேஜர் பேராயர் பாசிலியோஸ் கர்தினால் கிளீமிஸ் 2014 இல் போப்பை இந்தியாவிற்கு அழைக்குமாறு மோடியிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

அரசாங்கத்திற்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் இடையிலான உரையாடலுக்கு இதனை ஒரு புதிய வாய்ப்பாகக் கருதினார்.

போப் ஆண்டவருடனான பிரதமர் மோடி சந்திப்பு குறித்து பாசிலியோஸ் கர்தினால் கிளீமிஸ் கூறும் போது

“இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது,” இந்தச் சந்திப்பை இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பாக மட்டும் பார்க்கக் கூடாது; மாறாக, அது மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் மற்றும் ஒரு பெரிய மத சமூகத்தின் தலைவரை சந்திக்கும் ஒரு பண்டைய கலாச்சாரம்…”

“இது இந்தியாவில் பல்வேறு மத குழுக்களிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புக்கான நேர்மறையான முயற்சிகளைக் கொண்டுவரும். இது பேச்சுவார்த்தைகளின் தேவைக்கும் பங்களிக்கும். இந்தியாவிற்கு போப் ஆண்டவர் வருகைக்கான வழிகளை பிரதமர் திறந்து வைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறி உள்ளார்.

இது குறித்து பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறியதாவது;-

இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மத சமூகமான கிறிஸ்தவர்கள், பா.ஜ.க.விற்கு “வருங்கால ஆதரவு தளமாக” நிற்கிறார்கள். “பெரும்பான்மையான இந்துக்களும், கிறிஸ்தவர்களின் ஒரு பகுதியினரும் எங்களுக்கு ஒரு வலிமையான வாக்காளர் தளத்தை உருவாக்க முடியும் என்று கோவா அனுபவம் பா.ஜ.க.வுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது – அது கேரளா, மணிப்பூர் அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் தொடரலாம்” என்று அவர் கூறினார்.