அக்டோபர் 29 : சர்வதேச இணைய தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ம் திகதி சர்வதேச இணைய தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு இதே நாளில் முதன்முறையாக அமெரிக்காவில் இணையம் மூலம் இரண்டு கணினிகளுக்கு இடையே முதல் செய்தி அனுப்பப்பட்டது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையிலேயே இந்த நாளில் சர்வதேச இணைய தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து பேராசிரியர் லியோனார்டு கிளீன்ராக் மற்றும் அவரது மாணவர் சார்லி கிலைன் ஆகியோர் இணையம் மூலம் இந்த முதல் செய்தி பரிமாற்றத்தை நிகழ்த்தினர். அவர்கள் முதல் செய்தியாக ‘லாக்கின்‘ (Login) என்ற வார்த்தையை அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் எல் மற்றும் (lo) என்ற எழுத்துக்களை தட்டச்சு செய்த போது கணினி செயலிழந்ததால் ‘எல்ஓ’ (lo) என்ற வார்த்தையே முதல் செய்தியாக அனுப்பப்பட்டது. அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் ‘லாக்கின்’ என்ற வார்த்தையை அவர்கள் அனுப்பினர்.

அன்று தொடங்கிய இணையத்தின் சேவை பல வகைகளிலும் கிளை விட்டு வளர்ந்து, புதிய பல பரிணாமங்களை அடைந்து இன்று, மனிதர்களின் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இணையம் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இந்தியாவில் உள்ள இணையப் பயனர்கள் சராசரியாக 107 நிமிடங்கள் இணையத்தில் செலவிடுகிறார்கள். ஜூலை மாதத்தில் பெறப்பட்ட தரவுகளின்படி, இந்தியா, மொபைல் இணைய பதிவிறக்க வேகத்தில் உலக அளவில் 122-வது இடத்தில் இருக்கிறது. மேலும், நிலையான இணைய வேகத்தில் இந்தியா 68-வது இடத்தில் உள்ளது.