ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு, வருகிற 1 மற்றும் 2-ந் திகதிகளில் நடக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று தனி விமானத்தில் இத்தாலி புறப்பட்டு தலைநகர் ரோம் சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகியையும் பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயணத்தில் நேபாளம், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பருவநிலை மாறுபாடு உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.