சீனாவின் ஹெய்கே நகரத்தில் முழு ஊரடங்கு அமல்

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

சமீப காலமாக சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. அவற்றில் பெரும்பான்மையான தொற்று பாதிப்புகள் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக பரவியதாகவும், மேலும் பல தொற்றுகள் அறிகுறி இல்லாத பாதிப்புகளாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சீனாவில் உள்ளூர் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தில் அமைந்திருக்கும் லான்சோ நகரில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று அங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதே போல் கடந்த புதன்கிழமை, சீனா-மங்கோலியா எல்லையில் அமைந்துள்ள எஜின் பானர் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சீனாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள ஹெய்லோஜாங் மாகாணத்தில் ரஷ்ய எல்லையில் அமைந்திருக்கும் ஹெக்கே நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நகரில் உள்ள அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்குள் இயங்கலாம் என்றும் மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஊரடங்கு காலத்தில் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.