ஒரே திகதியில் மூன்று வருட இடைவெளியில் பிறந்த மூன்று குழந்தைகள்

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டின் லாமர்ட் என்ற பெண்ணுக்கு, 2015-ல் சோபியா, 2018-ல் கியுலியனா மற்றும் 2021-ல் மியா என சரியாக மூன்று வருட இடைவெளிகளில் ஒரே திகதியில் ஆகஸ்ட் 25 அன்று குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய கிறிஸ்டின், நாங்கள் எந்த விதமான திட்டமிடலும் செய்யவில்லை. மூன்று ஆண்டுகள் இடைவெளியில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் குழந்தைகள் ஒரே தேதியில் பிறந்திருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். ஏனெனில் மூன்று குழந்தைகளுக்கும் டாக்டர்கள் கொடுத்த திகதி வேறொன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் மூவரும் ஒரே திகதியில் பிறந்துள்ளனர்.

சோபியாவைக் கர்ப்பம் தரித்திருந்த போது சிக்கல்கள் எதுவும் இல்லாமல் பிரசவம் நடந்தது. சோபியா ஆகஸ்ட் 23, 2015-ல் பிறப்பார் என டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால் சோபியா 2 நாட்கள் தாமதாக ஆகஸ்ட் 25-ல் பிறந்தார்.

இரண்டாவது முறை கியுலியனாவை கர்ப்பம் தரித்திருந்த போது கொஞ்சம் சவால்களை சந்தித்துள்ளார். கிறிஸ்டின் அடிக்கடி குமட்டல்களை உணர்ந்திருக்கிறார். ஆனாலும் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் நலமாக இருந்தது. கியுலியனா ஆகஸ்ட் 29 தான் பிறப்பார் என டாக்டர்கள் கூறியிருந்த நிலையில் கிறிஸ்டினுக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக 4 நாட்கள் முன்னதாக செயற்கைத் தூண்டலின் மூலமாக ஆகஸ்ட் 25-ல் பிறந்தார்.

மேலும் 3-வது குழந்தையான மியாவை கருத்தரித்திருந்தபோது, கிறிஸ்டினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கிறிஸ்டின் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த முறை உயர் ரத்த அழுத்தம், தொடர் தலைவலி, மற்றும் தீவிர வீக்கத்தின் காரணமாக 2 வாரங்களுக்கு முன்னதாக செயற்கை முறையில் தூண்டப்பட்டு ஆகஸ்ட் 25-ல் மியாவை பிரசவித்தார். செப்டம்பர் 8 பிரசவ திகதியாக டாக்டர்கள் குறித்துக் கொடுத்திருந்த நிலையில் 14 நாட்கள் முன்னதாக தூண்டப்பட்டு மியா பிறந்தார் என்று கூறினார்.

மேலும் கிறிஸ்டின், இவை எதையும் நாங்கள் திட்டமிடவில்லை. ஆனாலும் இது நம்பமுடியாத சிறப்புவாய்ந்த தனித்துவமிக்க ஒரு உண்மை என கூறினார். இதுகுறித்து மினசோட்டா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான ராப் வாரன், ‘ஒரே தேதியில் மூன்று குழந்தைகளைப் பெறுவதற்கு பத்து லட்சத்தில் ஒரு வாய்ப்பு உள்ளது’ என கூறினார்.

இதுமட்டுமில்லாமல் கிறிஸ்டினின் குடும்ப நாயான 16 வயதாகும் கோடா பியரும் ஆகஸ்ட் 25 ந்திகதி தான் பிறந்தது என்பது மற்றுமொரு வியப்பூட்டும் தற்செயல்.