பிரேசில் அதிபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்: பாராளுமன்ற குழு ஒப்புதல்

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு கொரோனா தொற்றால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் கொரோனா தொற்று உயிரிழப்புகள் அதிகம்.

அந்த நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கொரோனா வைரசை தீவிரமாக எடுத்து கொள்ளமால் அலட்சியம் காட்டியதே தொற்று மற்றும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்கிற குற்றசாட்டு உள்ளது. இது தொடர்பாக போல்சனரோவை பதவி விலகக்கோரி அங்கு பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்து அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அந்த நாட்டின் பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பாராளுமன்ற குழுவின் 11 உறுப்பினர்களில் 7 பேர் போல்சனரோ மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் 9 குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைக்கும் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த குழுவின் தலைவர் ஒமர் அசிஸ், இந்த பரிந்துரையை பிரேசிலின் அட்டார்னி ஜெனரலிடம் ஒப்படைக்கவுள்ளார்.

பாராளுமன்ற குழுவின் இந்த பரிந்துரையால் போல்சனரோ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் இந்த பரிந்துரையை ஆய்வு செய்யும் நபரை அதிபரே நியமிப்பார். அது நிச்சயம் அவருக்கு ஆதரவாகத்தான் அமையும்.