இந்துக்களுக்கு எதிரான வன்முறை- வங்காளதேசத்தில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது

வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதிக்கும் வகையிலான புகைப்படம் பேஸ்புக்கில் பரவியதைத் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. துர்கா பூஜையின்போது ஏராளமான இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன, இந்துக்கள் பலர் தாக்கப்பட்டனர். இந்த வன்முறை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியதால், கலவரத்தைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் அதிவிரைவு பட்டாலியன் படையினர் (ஆர்ஏபி) களமிறக்கப்பட்டனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள், வன்முறைக்கு காரணமானவர்கன் என சுமார் 600 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இக்பால் உசைன் (வயது 35), துர்கா பூஜை நடைபெற்ற குமிலா பகுதியில் குரானை வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஆகியோர் நேற்று காக்ஸ் பஜாரில் கைது செய்யப்பட்டனர்.

இந்துக்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புடைய இரண்டாவது முக்கிய குற்றவாளி என நம்பப்படும் ஷைகத் மண்டல் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். டாக்கா புறநகர்ப் பகுதியான காசிப்பூரில் கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர், பேஸ்புக்கில் நேரலை செய்தது, வன்முறையை தூண்டியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களைத் தூண்டியதற்காக வங்காளதேசத்தின் டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தின் (டிஎஸ்ஏ) கீழ் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஃபாயஸ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.