காதலுக்காக அரச பட்டத்தை துறக்கும் மகோவிற்கு இளவரசியாக கடைசி பிறந்தநாள்

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ, கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து விரைவில் கரம்பிடிக்க இருக்கிறார்.

பல நூற்றாண்டுகளாக தொடரும் அரச வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தை துறந்ததுடன், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரயைும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம்) நிராகரித்தார் மகோ.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவம்பரில் தங்களின் திருமணம் நடைபெறும் என மகோ-கீ கோமுரோ ஜோடி அறிவித்த நிலையில், கீ கோமுரோவின் தாயின் கடன் பிரச்சினையால் இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கீ கோமுரோ தனது சட்டப்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மகோ-கீ கோமுரோவின் திருமணம் வருகிற 26-ந் திகதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று மகோ தன்னுடைய 30 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது காதலுக்காக தனது அரச பட்டத்தை துறந்த மகோ, இளவரசியாக கொண்டாடிய கடைசி பிறந்தநாள் ஆகும்.