மத்திய ரஷியாவின் டாடர்ஸ்டான் குடியரசின் மெண்செலின்ஸ்க் நகரை ஒட்டிய பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அங்குள்ள நேரப்படி இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.இந்த விபத்தில் 16 பயணிகள் மரணம் அடைந்துள்ளனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை ரஷிய செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டுள்ளது.
இது ஒரு 2 இன்ஜின் கொண்ட எல்-410 ரக விமானம். இந்த விமானம் சிறிய தூர போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் பாராசூட் சாகச வீரர்கள் குழு ஒன்று பயணம் செய்தது.அதில் மொத்தம் 23 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் பலத்த சேதமடைந்த விமானம் நேர் பாதியாக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த விமானம் 1987ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் இதுபோன்ற விமான விபத்துகள் நடப்பது சாதாரண விஷயமாகி விட்டது.கடந்த மாதம் கிழக்கு ரஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 6 பேர் பலியாகினர். இதே போல ஜூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் 28 பேர் பலியாகினர்.
Related Posts
அந்த விமானம் ரஷியாவின் ராணுவம், விமானம் மற்றும் கடற்படையின் உதவிக்காக செயல்படும் தன்னார்வ சங்கத்துக்கு சொந்தமானது. இந்த தன்னார்வ சங்கம் விளையாட்டு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.இந்த விமானத்தை போன்று இரண்டு எல்-410 விமானங்கள் இந்த வருடம் விபத்தை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இண்டெர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. ரஷியாவின் அவசர சேவைகள் குழு இந்த முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.