வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொலை 9 பேர் கைது

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47).

இவர் கடந்த 5-ம் தேதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கருத்து சுதந்திரம் தொடர்பான வகுப்பு நடந்த விவாதத்தில் நபிகள் நாயகத்தின்
கேலிச்சித்திரங்களை காட்டியுள்ளார்.

அப்போது அந்த வகுப்பில் படித்துவந்த ஒரு மாணவனின் பெற்றோர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டக்கூடாது என சாமுவேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாமுவேலுக்கு பல தரப்பில் இருந்தும் எச்சரிக்கையும் வந்துள்ளது.

இதற்கிடையில், பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த சாமுவேல் பெடியை பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாமுவேலின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையாளியை சரணடைய கேட்டுக்கொண்டனர். ஆனால், அந்த கொலையாளி தப்பிச்செல்ல முற்பட்டதால் கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இந்த தாக்குதல் ‘இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்’ என கூறினார். மேலும்,
’ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் துணைநின்று பாதுகாக்கும்’ என கூறினார்.

இதையடுத்து, இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டு போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் குறித்து பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு குழுவினர் விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில், சாமுவேல் பெடியை தலைதுண்டித்து கொலை செய்தது ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வரும் 18 வயது இளைஞன் என்பது
தெரியவந்தது.

இந்நிலையில், கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 9 பேரை பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு குழு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சாமுவேலை கொலை செய்து என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 18 வயது இளைஞனின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி மற்றும் 17 வயது சகோதரனும் உள்ளடக்கம். கைது செய்யப்பட்ட நபர்களிடம்
தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ரஷியாவின் சிசன்ஸ் மாகாணத்தில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய பிரிவினைவாத குழுவினருக்கும் ரஷிய ராணுவத்திற்கும் இடையே 1990-2000 ஆண்டுகளில் சண்டை நடைபெற்று வந்தது. இந்த சண்டையால் பாதிக்கப்பட்ட சிசன்ஸ் மாகாண மக்கள் ஆயிரக்கணக்கனோர் அகதிகளாக வெளியேறினர். அப்படி அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கானோருக்கு பிரான்ஸ் அடைக்கலம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.