கடந்த 20 வருட பட்டப்படிப்புகள் பயன்படாது: ஆப்கானிஸ்தான் உயர்க்கல்வித்துறை அமைச்சர் அதிரடி

ஆப்கானிஸ்தானில் 20 வருடத்திற்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்றிரண்டு நாடுகள் மட்டுமே தலிபான் அரசை அங்கீகரித்துள்ளன. தலிபான் ஆட்சியில் தனிமனித உரிமை, பெண்கள் சுதந்திரம் பறிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. அதற்கு ஏற்ப தலிபான்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் தலிபான் அரசின் பொறுப்பு உயர்க்கல்வி அமைச்சர் ஹக்கான உரையாற்றினார்.
தலிபான்கள் ஆட்சியில்லாமல் போரிட்ட 20 ஆண்டு காலத்தின் கல்வி குறித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது ‘‘மாணவர்கள் மற்றும் வரும் தலைமுறையினருக்கு வருங்காலத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அவர்களுடைய திறமைகளை பயன்படுத்த முடியும் என்று கற்பிக்கும் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கல்வி நிலை என்று வரும்போது கடந்த 20 ஆண்டு கால கல்வி மிகவும் முக்கியமானதாகவும், மிகவும் வசதியான சகாப்தம் எனவும் கருதப்படும். முதுநிலை மற்றும் பி.எச்.டி. படிப்பு மதராஸ் மற்றும் மதம் சார்ந்த படிப்பைவிட குறைவான மதிப்பு கொண்டது’’ என்றார்.
தலிபான் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளி படிப்பிற்கு தடைவிதித்தது. தற்போது ஆறாம் வகுப்பு வரை சிறுமிகள் பள்ளிக்கு வர அனுமதி அளித்துள்ளனர். ஆனால் சிறுமிகளுக்கு தனியாக, சிறுவர்களுக்கு தனியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகங்கள் பெண்களுக்கான வகுப்புகளை திறந்துள்ளன. ஆனால் அச்சம் காரணமாக வீட்டிலேயே உள்ளனர்.