அமெரிக்காவில் கொரோனா பலி 7 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனாலும் கடந்த வாரத்தில் இருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது. இதனை ஜான்ஸ் ஹோக்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3½ மாதங்களில் 1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக உள்ளது.

இதில் 3.38 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். 99 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தினமும் சராசரியாக 1,900 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் இதுவரை 55.7 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆனாலும் அங்கு வைரஸ் பரவல் அதிகமாகவே இருந்து வருகிறது. இதற்கு டெல்டா வகை கொரோனாவே காரணம் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 23.50 கோடியாக உள்ளது. இதுவரை 48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 4.71 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.