தலிபான்களுக்கு அடிபணிய மறுக்கும் பஞ்ச்ஷிர் போராளிகள் -பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா?

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியதுடன் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தலிபான்களிடம் மண்டியிட மறுத்ததுடன், சண்டையிடவும் தயாராக உள்ளது.

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990ம் ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய தலிபான்களால் கூட பஞ்ச்ஷிரை நெருங்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது தலைநகர் காபூலை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தங்களுக்கு சவாலாக திகழும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை அடிபணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு, அகமது மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சாலே ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நூற்றுக்கணக்கான வீரர்கள் போருக்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் உருவாகும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தலிபான்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தலிபான்கள் அடக்குமுறையை கையிலெடுத்தால், ரத்தம் சிந்த தயார் என அப்துல் மசூத் எச்சரித்துள்ளார். தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம். எங்களுக்கு போர் நடத்த விருப்பமில்லை. ஆனால், அவர்கள் சண்டை தான் தீர்வு என்று நினைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம் என்றார் மசூத்.

தலிபான்களுக்கு அடிப்பணிய மறுக்கும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி இஸ்லாமிக் எமிரேட் முஜாகிதீன் படையினர் ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். அதில் ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.